Wednesday, September 02, 2009

ஜெயமோகனுடன் சில மணிநேரங்கள்

எழுத்தாளர்கள் அவ்வப்போது சுந்தர ராமசாமி வீட்டில் கூடுவதும், பகிர்தலையும் படித்திருந்ததால் எனக்கும் எழுத்தாளர்களை சந்தித்து பேசுவதில் ஆர்வமிருந்தது. புலம் பெயர் வாழ்வில் அரிதாகிப்போன விஷயங்களில் ஒன்று வாசகர் சந்திப்பு, நண்பர்களின் சந்திப்பும் கூட. தென்றல் பத்திரிகையில் ஜெயமோகனின் பேட்டி, மற்றும் அவரது அமெரிக்க விஜயம் பற்றி அறிந்து கொண்டு ராஜன் அவர்களை தொடர்புகொண்டேன். DETROIT-ல் ஒரு சந்திப்பு-க்கு ஏற்பாடு செய்ய முனைகையில் அருள்பிரசாத் அதை முன்னமே செய்து முடித்திருந்தார்.



















காலையில் நானும், அண்ணாமலையும் கிளம்பி அருள்ப்ரசாத் வீட்டில் ஜெயமோகனை சந்தித்தோம். நடுத்தர தேகம். நரை, கொஞ்சம் வழுக்கை. பொதுவாக அதிகம் பேசுபவரல்ல என்றாலும் நட்பிருந்தது பேச்சில். இளம் காலை, மெதுவாக சூடேரிக்கொண்டிருந்தது. அம்முவும் பேராசிரியரும் எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருந்தனர். ராமசாமி கரிச்சான் குஞ்சுவின் மாணாக்கர் என்றும் அம்மு ராசுநல்லபெருமாள் அவர்களின் மகள் என்றும் அறியமுடிந்தது. Contemporary/ american literature பற்றி விவாதம் நகர்ந்து கொண்டிருந்தது. எனக்கும் கொஞ்சம் புரிந்தது. விஷ்ணுபுரம் பாதி படித்தது, கொஞ்சம் புதுமைபித்தன், சுரா, ராமகிருஷ்ணன், மெளனி, நகுலன், சில கவிதைகள், வலை பதிவுகள் ...இப்படியாக நானும் இவர்கள் உலகுக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தேன்.

ஜெயமோகன், அண்ணாமலை, நான் மூவரும் Ford Musium பார்ப்பதற்காக கிளம்பினோம். DETROIT பற்றியும், 1920-30 களில் அதன் பொற்காலம் பற்றியும் பேச்சு விரிந்துகொண்டு சென்றது. Musium-ல் American Civil war பற்றியும், இவர்களின் கடுமையான உழைப்பு பற்றியும் ஜெயமோகன் பேசிக்கொண்டு வந்தார். சில நகரங்களில் அவர் சந்தித்த வாசகர்களின் கேள்விகளின்பால் எரிச்சலடைந்ததையும் குறிப்பிட்டார். நானும் என் பங்கிற்கு ஒன்றைக் கேட்டுவைத்தேன், அதை பிறகு சொல்கிறேன்.

இந்தியாவின் மக்கள் சோம்பேரிகள் என்பதை போன்ற தொனிகொண்ட எந்த கேள்வியும் அவரை சோர்வடையச் செய்திருக்கிறது. இந்தியாவின் வேறுபாடுகளையும், சமுதாய ஏற்ற தாழ்வுகள், Reginalism எல்லாம் கடந்த ஒரு பண்பாட்டு வெளி அனைவரையும் இணைக்கிறது, இரண்டு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த நமது முன்னோர்களின் கடுமையான உழைப்பும் தியாகமும் தான் நாம் இன்று தலை நிமிர்ந்து வாழ்வதற்கான ஆதாரம் என்கிறார். இந்தியா என்ற நரகம் பிடித்து பின்-இழுக்குமுன் கடைசி நொடியில் தப்பித்து வந்துவிட்டது போலவும், அங்கிருப்பவர்கள் எல்லாம் சபிக்கப்பட்ட, வளமான வாழ்வுக்கான திறனற்றவர் என்பது போன்றதொரு மனோபாவத்துடன் பேசும் புலம் பெயர்ந்தவர்கள் ஜெயமோகனுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு நன்றியுணர்வை ஊட்டமுடியாத ஒரு தலைமுறை தங்களது பிள்ளைகள் தங்களை மதிப்பதில்லை, தங்கள் கலாசாரங்களில் பங்கெடுத்துக்கொள்வதில்லை என்று புலம்புவதில் யாதொரு பலனுமில்லை என்கிறார். ஒரு சராசரி தகப்பனாக, தன் மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்வும், அதற்கான உழைப்புக்கு சக்தியை மீறியே சராசரி இந்தியன் செயல்படுகிறான் என்ற கூற்றில் நிறையவே உண்மையிருப்பதாகப்பட்டது.

மதிய உணவுக்காக யாசின், மத்திய-கிழக்கு வகை உணவகத்திற்கு சென்றோம். அவர் அசைவம் சாப்பிடுவதுண்டு. சாப்பிடுக்கொண்டே பேச்சு சமகால இலக்கியவாதிகள் பக்கம் சென்றது. கோணங்கி, நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களை அடிக்கடி குறிப்பிட்டு பேசுகிறார். பூமணி பற்றி கேட்ட போது, கடந்த 25 வருடத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதையும் பூமணி செய்யவில்லை என்றார். இலக்கிய அரசியல், மற்றும் வம்பு பேசுவதில் அவர் அவ்வளவாக சுவாரஸ்யம் காட்டவில்லை. ஜெயமோகனுடனான சந்திப்பில் சாரு பற்றி கேட்காமல் எப்படி? ஒருகாலத்தில் ரஜினியா/ கமல்-ஆ என்பதை போன்ற ஸ்வாரஸ்யம் கொண்ட விஷயம் இது. ஜெயமோகனின் மிச்சிகன் பயணம் பற்றி அனைவர்க்கும் தகவல் தெரிவித்தபோது ஒரு நண்பன் சாரு-ரசிகன் என்பதால் வரமுடியாது என்று வேடிக்கையாகச் சொல்லியிருந்தான்.

















சாரு பற்றியும், அவரது இலக்கிய வரம்பு தாண்டிய தனிநபர் தாக்குதல் பற்றி கேட்டபோது , அது பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை, என்றாலும் சாரு பற்றி பேசுவது இருவருக்கும் காலவிரயம் என்றும், சாரு ஒரு தீவிர எழுத்தாளர் அல்ல ஒரு (விருவிருப்பாக வெளிவரக்கூடிய) பத்தி எழுத்தாளர் என்ற அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றபடி அதை கடந்து சென்று விட்டார். ஜெயமோகனின் பேச்சில் ஒரு தெளிவும் நேர்மையும் இருந்தது. இப்போது உரையாடல் இந்துசமயத்தில் நடைபெறும் வழிபாட்டு முறைகளை நோக்கி திரும்பியது.

நம் வழக்கங்களில் காணப்படும் சிலை வழிபாடு, பாம்பு, யானை, குரங்கு மற்றும் மூதாதயர் வழிபாடு, மற்றும் குரு (இப்போது ஊருக்கு 4 குரு உள்ளனர்) இவை பற்றியெல்லம் பேசத்தொடங்கினோம். இந்து சமயத்தை பொருத்தவரையில் இறைஉணர்வு தான் முக்கியம், வழிபாட்டு முறைகளுக்கு அல்ல என்றபோது நான் கேட்ட கேள்வியை அவர் ரசிக்கவில்லை. குஷ்புவுக்கு கோவில் கட்டுவது வரை வரை இந்த உணர்வு நீண்டுவிட்டதே என்றதற்கு, கோவில் கட்டியது என்பது அவருடைய சில நண்பர்கள் செய்த வேடிக்கை தவிர உண்மையல்ல என்றார். அவரது சினிமா ப்ரவேசம் பற்றி கேட்டபோது, அது ஒரு தொழில், அதில் சமரசங்களுக்கு இடமுண்டு என்று சொன்னதாக ஞாபகம். வசந்தபாலனின் (வெயில்) ஒரு படத்திற்காக சமீபத்தில் work செய்ததாக குறிப்பிட்டார். படங்கள் HIT-ஆகும் பட்சத்தில், படத்துக்கு 15 லட்சம் வரை கிடைக்கலாம் என்றார்.
மதிய உணவிற்கு பிறகு Ford Motor Company-ன் F-150 Truck உற்பத்திபிரிவிற்கு சென்றோம். TATA வின் சமீபத்திய Truck ஒன்றை ஒப்பிட்டபடி அதன் "குட்டி யானை" விளம்பரத்தை சிலாகித்தார். சூரியன் மெதுவாக மேற்கிலே தாழ்த்திக்கொள்ள தொடங்கியவுடன் சுற்றலை முடித்துக்கொண்டு, வாசகர் சந்திப்புக்கு கிளம்பினோம்.

தென்னிந்தியாவின் கோவில் கோபுரங்களில் தோன்றும் பாலியல் சிற்பங்களை நோக்கி பேச்சு தொடங்கியது. ஜெயமோகன் வெளிப்படையாகவும் வரலாற்று பூர்வமாகவும் பாலியலுக்கு சமூகத்தில், ஆன்மிகத்தில், இயற்கையில் உள்ள தொடர்புகள் பற்றி பேசிக்கொண்டு போனார். ஆன்மிகத்தில் இடைச்செருகலால் பாலுணர்வு தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது. கிருத்துவ மதத்தில் உடலுறவு கொள்ளக்கூடிய முறையை இன்றளவும் கூட மிஷனரி பொசிஷன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மதத்தின் தலையீடு இருந்திருக்கிறது. நம் ஊர்களில் நடக்கும் தேர் திருவிழா நாட்களில் கூட்டுப்புணர்வு, குழந்தையில்லா பெண்கள் வீரியம் மிக்க ஆண்களுடன் கூடுதல் போன்றவை 1910 வ்ரை கூட வழக்கத்தில் இருந்திருக்கிறது என்றார். சங்ககாலங்களில் வயலுக்கு விதை போடுவதும், ஆண்-பெண் கூடலையும் இணைத்து சொல்லக்கூடிய பல விஷயங்கள் இருப்பதையும் தெரிவித்தார். விலங்குகளில் வலிமை வாய்ந்தவைகளால் (ஆணினம்) மட்டுமே உறவு கொள்ளமுடியும். வலிமையற்ற நாய் ஒன்று உறவே கொள்ளமுடியாமல் தன் வாழ்நாளை முடித்துகொள்வதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ அனத்துவிதமான களியாட்டங்களும் வலிமையான சந்ததியைபெரும் பொருட்டே நிகழ்வதாய் குறிப்பிட்டார். விலங்கினங்களில் உறவு என்பது இன்பநுகர்ச்சியை மட்டுமே நோக்கமாகக்கொண்ட நிகழ்வு, சந்ததி விருத்தி என்பது ஒரு பக்க விளைவுதானே? நாமும் அடிப்படையில் விலங்குதானே? ஒரு வழியாக வாசகர்சந்திப்பு நடக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.























மாலை 7 மணியளவில் வாசகர் சந்திப்பு ஆரம்பமானது. அம்மு அவர்கள் வீட்டில் மிகநன்றாக உணவு செய்திருந்தார்கள். இந்திய வரலாறு பற்றி நீலகண்ட சாஸ்திரிகளைவிடவும் கோசாம்பி மிக நன்றாகப் பதிவுசெய்திருப்பதாய் ஜெயமோகன் கூறினார். இந்துமதமானது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பலகாலமாய் வழிபட்டுவந்த சிறு-சிறு தெய்வங்களின் கூட்டுத்தொகுப்புதான். இன்னும் அந்த தொகுப்பு நீண்டு போய்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்திலும் கூட ஒரு மிகச்சிறிய கூட்டத்தாரால் வழிபடக்கூடிய ஒரு சிறு தெய்வத்திற்குகூட இந்துமதத்தில் அதற்கான இடம் இருக்கவே செய்கிறது என்ற அவர் கருத்து மறுப்பதற்கில்லை. சந்திப்பிற்கு வந்த பாஸ்கரன், 3 பக்க அளவில் கேள்விகளுடன் வந்திருந்தார். அவைகளுக்கான ஜெயமொகனின் பதிலை கேட்குமுன் நானும் அண்ணாமலையும் வீட்டிற்கு கிளம்பவேண்டியிருந்தது.

4 comments:

Unknown said...

அனந்த்,

ரொம்ப நல்ல எழுதி இருக்கிறீர்கள்.
தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள்.

பாஸ்கர்.

goma said...

அருமையான சந்திப்பு ஆக்கப் பூர்வமான அலசல்
இது போல் சந்திப்புகளை மாதம் ஒரு முறையாவது நடத்துங்கள்.

KARMA said...

பாஸ்கர்,

வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி. உங்கள் வலைபதிவையும் அவ்வப்போது பார்த்து வருகிறேன். நீங்கள் கணிதத்தின்மீது மிகுந்த ஆர்வமுடையவராதலால் இந்த வேண்டுகோள். சூன்யம் (zero) பற்றி ஒரு கட்டுரை.... நன்றி.

KARMA said...

கோமா (கோமதி?),

உங்கள் கருத்துக்கு நன்றி.
நிறைய எழுதுகிறீர்கள், பதிவை சிறிது பார்வையிட்டேன்.

ஆன்மா பூர்வமான எந்த சந்திப்பிலும் ஆர்வமுண்டு. நண்பர்களிடம் அடிக்கடி கூறுவதுண்டு, ஒத்த எண்ண ஓட்டங்களுடைய சிலர் மாதம் ஒருமுறை சந்தித்தாலென்ன?

ம்ம்ம்.....எல்லாரும் BUSY. என்ன செய்ய..??? அப்படியென்ன உங்களையே கொள்ளை கொண்டு போகிற வாழ்க்கையின் பின் பேயாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?