Friday, October 05, 2012

என்னமோ தோணிச்சு ...!!!



அடிவானம் கருத்து,

சில்லினு காத்து

அப்பவோ இப்பொவோ-னு

முட்டிகிட்டு நிக்குது மழை


வேலிக்கருவை-ல பச்சை காய்,

குட்டி செவலை ஆடு

கம்மா கரை,

கைல புளி மாங்கா - கொஞ்சம் உப்பு.


கோல்கேட் பல்பொடி,

அம்மங் குளத்து குடி தண்ணி,

ஆலடையான் பொட்டல்ல கிட்டி-புல்லு


மார்கழி குளிரு,

வாசல்ல பரங்கி-பூ கோலம்

பெருமாள் கோயில் புளியோதரை


பலாப்பழ வாசனை,

பீம புஷ்டி ஹல்வா

ஊர்ல திருவிழா


ராத்திரி நேரத்து ரயில்வண்டி

சன்னலோரம்,

நினைவுச் சுமை,

துணைக்கு தனிமை.

Friday, December 23, 2011

வீணாப்போன விலங்கு

ஒன்றும் செய்ய முடிவதில்லை ,
ஓடுவதையும் நிறுத்த முடியவில்லை ,
பாழாய் போன எண்ணங்கள் .

விளங்கவியலா வாழ்வதனை
நிரப்பிக்கொள்ள இருக்கிறது இடம், காலம்.
அது எதுவானால் என்ன?

மனித விலங்கு மட்டும்
இன்னும் அலைகிறது
பசி, உறக்கம் தாண்டிய தத்துவம் தேடி


Monday, February 01, 2010

அரவம் விழித்த இரவொன்றில்...!!!


கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து தின்று
கொண்டிருக்கின்றன.

மனமென்ற மெத்தை, அதன் சடுதியற்ற சலனத்தின்
மெலிதான காணமொன்றில் ஏறிப்படர்ந்த இவை காத்திருந்தன,
விழிப்பு கரைந்திருந்த இரவொன்றின் வருகைக்காய்...

தனியாக இருப்பதாயும், கேட்பாரற்ற அவலம்
கேட்பாரில்லையோ -- இது போல சில
'நான்'-இருக்கத் தானே சர்வமும் - என்பதாய் பல

இடம் பிடித்தன நெருக்கமாய்,
என்னைவிட என்னிடம் - பின்
மெதுவாய் விழைந்தன
உடம்பிடம் உரையாட

விழிப்பெனை நெருங்குமுன்
உயிர் ருசித்தறியும் நோக்குடன்
இன்னும் தின்று கொண்டுதானிருக்கின்றன
கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து.

பிறிதொரு நாளில் தான் புரிந்தது - ஆயினும்
இல்லாதவொன்றை இழப்பதெப்படி...?
மெத்தையை மொத்தமுமாய்
கர்மத்தீயில் தொலைக்காதவரை.




Friday, January 22, 2010

எக்கேடுங் கெட்டு போங்க....

WHO -scam பத்தி படிச்சிங்களா... http://thatstamil.oneindia.in/news/2010/01/22/india-asks-who-explain-swine-flu.html எப்பிடிப்பட்ட பயங்கரமான உலகத்துல நாம வாழ்ந்திட்டிருக்கோம், நம்ம புள்ள குட்டிகளுக்கெல்லாம் இவங்க சொல்றத நம்பி மருந்து கொடுக்கிறோமே, ரொம்ப பயமாயிருக்கு.....



காய்கறி, பழங்கள் எல்லாம் ஏற்கனவே
மரபணு மாற்றம், ரசாயன உரத்தால நஞ்சாயிட்டுது.
மண்ணே விஷமாகி போச்சு...!!!

தண்ணி நிலத்துக்கு மேல இருந்தா சாக்கடைய கலக்குறோம்,
இல்லாட்டி சாயப்பட்டறை.
தண்ணி நிலத்தடில இருந்தா கோக், பெப்சி-கோலா

7 - தலைமுறைக்கு உண்டான காற்று மண்டலத்த நாசம் பண்ணியாச்சு....
சுத்தி-முத்தி இருக்கற எல்லா மிருகங்களையும்
ஆராய்ச்சி பண்றேன்னு போட்டுத் தாக்குவோம் - மிச்சம் எதானுமிருந்தா
தின்னு தீப்போம்.

சிக்கன்-குனியா, மட்டன் -மணியா - அப்பொறம்
எலிப்புளுக்கை காச்சல்-னு அலறுவோம் - ஆஸ்பத்திரிக்கு ஓடினா...
அங்க ஒன்ன மாதிரி ஒருத்தன் போட்டு தாக்குவான்.
அடா, அடா......என்ன அமோகமான வாழ்க்கை?

அதுனால என்ன ??? அதான் விட்டுட்டு போறமே ..... LCD -டிவி, microwave ,nano-tech , laptop for everyone , ....etc, etc



இதுக்கும் மேல என்னதான் வேணும்
வருங்கால தலைமுறைக்கு....!!!

Monday, January 11, 2010

கேள்வி-பதில்


பதில்கள் சிறிதும் களைப்பின்றி
தேடியலைகின்றன....
அதனதற்கான கேள்விகளைத் தேடி,

பதில் தெரியாத கேள்விகளை விட
கேள்வியறியா பதில்களின் பாடு ?
தூரத்தில் வந்து அறைகிறது...

விடையற்றதொரு வினாவை தேடியலையும்
என்னிடத்தில் "நான்" சொன்னேன்,
அழைக்க மட்டுமே முடியும் உன்னை
பதில்கள் தெரியா கேள்விகளின் உலகிற்கு.

முடிந்தாலும் முடியலாம் பயணம்
கேள்வி/பதில் அகன்றதொரு அர்த்தமற்ற வெளியில்,

அல்லது மீண்டும் தொடங்கலாம்
"எதற்கிதெல்லாம் ???" என்ற மற்றுறொன்றுடன்...














Thursday, October 29, 2009

உலகத்தமிழ் மாநாட்டின் உடனடித்தேவை...!!!


தன்மானச் சிங்கம், தமிழினதலைவர் ..... ம்ம்ம், இன்னும் இருக்கு பாருங்க நம்பிக்கை.

முன்னாடில்லாம் சோனியா அம்மையாருக்கு(மட்டும்?)தான் இந்த மாதிரி, இப்பொ அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்க்கு கூடவா ?? சும்மா ...புல்லரிக்குது தலைவா.....ரொம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கு.

அட ராமதாஸே தேவல....தலைவர் காங்கிரஸ்க்கு போடர கும்பிட பாத்தா ரொம்ப பரிதாபமா இருக்கு. இந்த மாதிரி பிறவிகள் பெரியார் பெயரை நா-கூசாம சொல்ரது இன்னும் வேதனை, ஆமா.... சுய-மரியாதை-னா என்ன?

ஈழத்தமிழர்கள் ஆஸ்த்ரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவுல கடல்ல தத்தளிக்கறாங்களாமே...... தலைவர் ஒரு நாளக்கி 16 news paper படிப்பாராமே? இந்த news தெரியாதா ? "ஓ...." sun-TV -ல மானாட-மயிலாட நிகழ்ச்சியை நேர்ல ரசிச்சுகிட்டு இருக்காரா, இருக்கட்டும் பாவம், disturb பண்ணகூடாது. 8 கோடி தமிழர்க்கும் தலைவராமே.......அதாங் கேட்டேன். நல்லா இருக்கட்டும்.

இந்த லட்சணத்துல உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வேர ....வேண்டியதுதான், தமிழனெல்லாம் செத்து, மேட்டுல புல்லு மொளச்சாச்சு, அப்பொறம் எவனெ வெச்சு விழா கொண்டாடரது?.....ஓ....sun-TV - க்கு news, விளம்பரம், பணம் பண்ண வேண்டாமா தலைவர் குடும்பம்...நடக்கட்டும், உலகத்தமிழ் மாநாடு கண்டிப்பா வேணும்.

வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு .....!!!
இந்த பாட்டெ ஒவ்வொரு வெள்ளிக்கெளெமயும் நான் படிச்ச கிராமத்து பள்ளிகூடத்திலெ பாடுவோம். இன்னும் கண்ணுக்குள்ளெயே நிக்குது.
ரொம்ப கேக்கல....கடல்ல நிராதரவா விடப்பட்ட சீவங்கெளுக்கு ஒதுங்கரதுக்கு ஒரு எடமும், பிள்ளங்க வயித்துக்கு கொஞ்சம் சோரு. இது அதிகமோ ?
September-ல சன் டிவியோட லாபம் 20% அதிகமாமே ? நெசமா ??

Wednesday, September 02, 2009

ஜெயமோகனுடன் சில மணிநேரங்கள்

எழுத்தாளர்கள் அவ்வப்போது சுந்தர ராமசாமி வீட்டில் கூடுவதும், பகிர்தலையும் படித்திருந்ததால் எனக்கும் எழுத்தாளர்களை சந்தித்து பேசுவதில் ஆர்வமிருந்தது. புலம் பெயர் வாழ்வில் அரிதாகிப்போன விஷயங்களில் ஒன்று வாசகர் சந்திப்பு, நண்பர்களின் சந்திப்பும் கூட. தென்றல் பத்திரிகையில் ஜெயமோகனின் பேட்டி, மற்றும் அவரது அமெரிக்க விஜயம் பற்றி அறிந்து கொண்டு ராஜன் அவர்களை தொடர்புகொண்டேன். DETROIT-ல் ஒரு சந்திப்பு-க்கு ஏற்பாடு செய்ய முனைகையில் அருள்பிரசாத் அதை முன்னமே செய்து முடித்திருந்தார்.



















காலையில் நானும், அண்ணாமலையும் கிளம்பி அருள்ப்ரசாத் வீட்டில் ஜெயமோகனை சந்தித்தோம். நடுத்தர தேகம். நரை, கொஞ்சம் வழுக்கை. பொதுவாக அதிகம் பேசுபவரல்ல என்றாலும் நட்பிருந்தது பேச்சில். இளம் காலை, மெதுவாக சூடேரிக்கொண்டிருந்தது. அம்முவும் பேராசிரியரும் எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருந்தனர். ராமசாமி கரிச்சான் குஞ்சுவின் மாணாக்கர் என்றும் அம்மு ராசுநல்லபெருமாள் அவர்களின் மகள் என்றும் அறியமுடிந்தது. Contemporary/ american literature பற்றி விவாதம் நகர்ந்து கொண்டிருந்தது. எனக்கும் கொஞ்சம் புரிந்தது. விஷ்ணுபுரம் பாதி படித்தது, கொஞ்சம் புதுமைபித்தன், சுரா, ராமகிருஷ்ணன், மெளனி, நகுலன், சில கவிதைகள், வலை பதிவுகள் ...இப்படியாக நானும் இவர்கள் உலகுக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தேன்.

ஜெயமோகன், அண்ணாமலை, நான் மூவரும் Ford Musium பார்ப்பதற்காக கிளம்பினோம். DETROIT பற்றியும், 1920-30 களில் அதன் பொற்காலம் பற்றியும் பேச்சு விரிந்துகொண்டு சென்றது. Musium-ல் American Civil war பற்றியும், இவர்களின் கடுமையான உழைப்பு பற்றியும் ஜெயமோகன் பேசிக்கொண்டு வந்தார். சில நகரங்களில் அவர் சந்தித்த வாசகர்களின் கேள்விகளின்பால் எரிச்சலடைந்ததையும் குறிப்பிட்டார். நானும் என் பங்கிற்கு ஒன்றைக் கேட்டுவைத்தேன், அதை பிறகு சொல்கிறேன்.

இந்தியாவின் மக்கள் சோம்பேரிகள் என்பதை போன்ற தொனிகொண்ட எந்த கேள்வியும் அவரை சோர்வடையச் செய்திருக்கிறது. இந்தியாவின் வேறுபாடுகளையும், சமுதாய ஏற்ற தாழ்வுகள், Reginalism எல்லாம் கடந்த ஒரு பண்பாட்டு வெளி அனைவரையும் இணைக்கிறது, இரண்டு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த நமது முன்னோர்களின் கடுமையான உழைப்பும் தியாகமும் தான் நாம் இன்று தலை நிமிர்ந்து வாழ்வதற்கான ஆதாரம் என்கிறார். இந்தியா என்ற நரகம் பிடித்து பின்-இழுக்குமுன் கடைசி நொடியில் தப்பித்து வந்துவிட்டது போலவும், அங்கிருப்பவர்கள் எல்லாம் சபிக்கப்பட்ட, வளமான வாழ்வுக்கான திறனற்றவர் என்பது போன்றதொரு மனோபாவத்துடன் பேசும் புலம் பெயர்ந்தவர்கள் ஜெயமோகனுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு நன்றியுணர்வை ஊட்டமுடியாத ஒரு தலைமுறை தங்களது பிள்ளைகள் தங்களை மதிப்பதில்லை, தங்கள் கலாசாரங்களில் பங்கெடுத்துக்கொள்வதில்லை என்று புலம்புவதில் யாதொரு பலனுமில்லை என்கிறார். ஒரு சராசரி தகப்பனாக, தன் மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்வும், அதற்கான உழைப்புக்கு சக்தியை மீறியே சராசரி இந்தியன் செயல்படுகிறான் என்ற கூற்றில் நிறையவே உண்மையிருப்பதாகப்பட்டது.

மதிய உணவுக்காக யாசின், மத்திய-கிழக்கு வகை உணவகத்திற்கு சென்றோம். அவர் அசைவம் சாப்பிடுவதுண்டு. சாப்பிடுக்கொண்டே பேச்சு சமகால இலக்கியவாதிகள் பக்கம் சென்றது. கோணங்கி, நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களை அடிக்கடி குறிப்பிட்டு பேசுகிறார். பூமணி பற்றி கேட்ட போது, கடந்த 25 வருடத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதையும் பூமணி செய்யவில்லை என்றார். இலக்கிய அரசியல், மற்றும் வம்பு பேசுவதில் அவர் அவ்வளவாக சுவாரஸ்யம் காட்டவில்லை. ஜெயமோகனுடனான சந்திப்பில் சாரு பற்றி கேட்காமல் எப்படி? ஒருகாலத்தில் ரஜினியா/ கமல்-ஆ என்பதை போன்ற ஸ்வாரஸ்யம் கொண்ட விஷயம் இது. ஜெயமோகனின் மிச்சிகன் பயணம் பற்றி அனைவர்க்கும் தகவல் தெரிவித்தபோது ஒரு நண்பன் சாரு-ரசிகன் என்பதால் வரமுடியாது என்று வேடிக்கையாகச் சொல்லியிருந்தான்.

















சாரு பற்றியும், அவரது இலக்கிய வரம்பு தாண்டிய தனிநபர் தாக்குதல் பற்றி கேட்டபோது , அது பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை, என்றாலும் சாரு பற்றி பேசுவது இருவருக்கும் காலவிரயம் என்றும், சாரு ஒரு தீவிர எழுத்தாளர் அல்ல ஒரு (விருவிருப்பாக வெளிவரக்கூடிய) பத்தி எழுத்தாளர் என்ற அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றபடி அதை கடந்து சென்று விட்டார். ஜெயமோகனின் பேச்சில் ஒரு தெளிவும் நேர்மையும் இருந்தது. இப்போது உரையாடல் இந்துசமயத்தில் நடைபெறும் வழிபாட்டு முறைகளை நோக்கி திரும்பியது.

நம் வழக்கங்களில் காணப்படும் சிலை வழிபாடு, பாம்பு, யானை, குரங்கு மற்றும் மூதாதயர் வழிபாடு, மற்றும் குரு (இப்போது ஊருக்கு 4 குரு உள்ளனர்) இவை பற்றியெல்லம் பேசத்தொடங்கினோம். இந்து சமயத்தை பொருத்தவரையில் இறைஉணர்வு தான் முக்கியம், வழிபாட்டு முறைகளுக்கு அல்ல என்றபோது நான் கேட்ட கேள்வியை அவர் ரசிக்கவில்லை. குஷ்புவுக்கு கோவில் கட்டுவது வரை வரை இந்த உணர்வு நீண்டுவிட்டதே என்றதற்கு, கோவில் கட்டியது என்பது அவருடைய சில நண்பர்கள் செய்த வேடிக்கை தவிர உண்மையல்ல என்றார். அவரது சினிமா ப்ரவேசம் பற்றி கேட்டபோது, அது ஒரு தொழில், அதில் சமரசங்களுக்கு இடமுண்டு என்று சொன்னதாக ஞாபகம். வசந்தபாலனின் (வெயில்) ஒரு படத்திற்காக சமீபத்தில் work செய்ததாக குறிப்பிட்டார். படங்கள் HIT-ஆகும் பட்சத்தில், படத்துக்கு 15 லட்சம் வரை கிடைக்கலாம் என்றார்.
மதிய உணவிற்கு பிறகு Ford Motor Company-ன் F-150 Truck உற்பத்திபிரிவிற்கு சென்றோம். TATA வின் சமீபத்திய Truck ஒன்றை ஒப்பிட்டபடி அதன் "குட்டி யானை" விளம்பரத்தை சிலாகித்தார். சூரியன் மெதுவாக மேற்கிலே தாழ்த்திக்கொள்ள தொடங்கியவுடன் சுற்றலை முடித்துக்கொண்டு, வாசகர் சந்திப்புக்கு கிளம்பினோம்.

தென்னிந்தியாவின் கோவில் கோபுரங்களில் தோன்றும் பாலியல் சிற்பங்களை நோக்கி பேச்சு தொடங்கியது. ஜெயமோகன் வெளிப்படையாகவும் வரலாற்று பூர்வமாகவும் பாலியலுக்கு சமூகத்தில், ஆன்மிகத்தில், இயற்கையில் உள்ள தொடர்புகள் பற்றி பேசிக்கொண்டு போனார். ஆன்மிகத்தில் இடைச்செருகலால் பாலுணர்வு தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது. கிருத்துவ மதத்தில் உடலுறவு கொள்ளக்கூடிய முறையை இன்றளவும் கூட மிஷனரி பொசிஷன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மதத்தின் தலையீடு இருந்திருக்கிறது. நம் ஊர்களில் நடக்கும் தேர் திருவிழா நாட்களில் கூட்டுப்புணர்வு, குழந்தையில்லா பெண்கள் வீரியம் மிக்க ஆண்களுடன் கூடுதல் போன்றவை 1910 வ்ரை கூட வழக்கத்தில் இருந்திருக்கிறது என்றார். சங்ககாலங்களில் வயலுக்கு விதை போடுவதும், ஆண்-பெண் கூடலையும் இணைத்து சொல்லக்கூடிய பல விஷயங்கள் இருப்பதையும் தெரிவித்தார். விலங்குகளில் வலிமை வாய்ந்தவைகளால் (ஆணினம்) மட்டுமே உறவு கொள்ளமுடியும். வலிமையற்ற நாய் ஒன்று உறவே கொள்ளமுடியாமல் தன் வாழ்நாளை முடித்துகொள்வதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ அனத்துவிதமான களியாட்டங்களும் வலிமையான சந்ததியைபெரும் பொருட்டே நிகழ்வதாய் குறிப்பிட்டார். விலங்கினங்களில் உறவு என்பது இன்பநுகர்ச்சியை மட்டுமே நோக்கமாகக்கொண்ட நிகழ்வு, சந்ததி விருத்தி என்பது ஒரு பக்க விளைவுதானே? நாமும் அடிப்படையில் விலங்குதானே? ஒரு வழியாக வாசகர்சந்திப்பு நடக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.























மாலை 7 மணியளவில் வாசகர் சந்திப்பு ஆரம்பமானது. அம்மு அவர்கள் வீட்டில் மிகநன்றாக உணவு செய்திருந்தார்கள். இந்திய வரலாறு பற்றி நீலகண்ட சாஸ்திரிகளைவிடவும் கோசாம்பி மிக நன்றாகப் பதிவுசெய்திருப்பதாய் ஜெயமோகன் கூறினார். இந்துமதமானது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பலகாலமாய் வழிபட்டுவந்த சிறு-சிறு தெய்வங்களின் கூட்டுத்தொகுப்புதான். இன்னும் அந்த தொகுப்பு நீண்டு போய்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்திலும் கூட ஒரு மிகச்சிறிய கூட்டத்தாரால் வழிபடக்கூடிய ஒரு சிறு தெய்வத்திற்குகூட இந்துமதத்தில் அதற்கான இடம் இருக்கவே செய்கிறது என்ற அவர் கருத்து மறுப்பதற்கில்லை. சந்திப்பிற்கு வந்த பாஸ்கரன், 3 பக்க அளவில் கேள்விகளுடன் வந்திருந்தார். அவைகளுக்கான ஜெயமொகனின் பதிலை கேட்குமுன் நானும் அண்ணாமலையும் வீட்டிற்கு கிளம்பவேண்டியிருந்தது.